நம் இந்திய தேசத்தின் சிறப்பான வளர்ச்சிக்கு முதுகெலும்பாக இருக்கப் போகும், இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகளை, தேர்ந்தெடுக்கும் சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க காத்திருக்கும் அடலேறுகளே ! இலட்சியவாதிகளே !
நீங்கள் பின்வரும் ஏதேனும் ஒன்றிலோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்டவற்றிலோ பற்று உடையவராக இருந்தால் தயவு கூர்ந்து எதிர் வரும் சிவில் சர்வீஸ் தேர்வுக்கும், இது தவிர மத்திய, மாநில அரசுகள் நடத்தும் இது போன்ற எந்த ஒரு தேர்வுகளுக்கும் விண்ணப்பிக்க முன் வர வேண்டாம் என கனிவுடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
1. பணம் சம்பாதிப்பது ஒன்றே பிரதான நோக்கமாகவும், குறிக்கோளாகவும் கொண்டிருக்கும் சுயநலவாதிகள்
2. 'அன்பளிப்பு பெறுகிறேன்' என்ற பெயரில் கவுரவப் பிச்சை எடுக்கக் காத்திருக்கும் இலஞ்சப் பேர்வழிகள்.
3. அரசின் சிறப்பான திட்டங்களை செயலாற்ற, எல்லா வகையிலும் கமிஷன் பெற்று கோடிகளில் புரள ஆவல் கொடிருக்கும் இலட்சியவாதிகள்
4. அரசியல் சாணக்கியர்களின் கைப்பாவையாக, ஆட்டுவித்த பொம்மையாக செயல் பட ஆர்வம் கொண்டிருப்பவர்கள்.
5. அரசு பொறுப்பை ஏற்றவுடன், தங்களால் இயன்ற அளவுக்கு, உலக அளவில் நம் இந்திய மண்ணிற்கு களங்கம் ஏற்படுத்த காத்திருப்பவர்கள்.
6. பொதுநலம் என்ற வார்த்தையை அகராதியில் தேடும் அறிவிலிகள்
மேற்கண்ட 'சிறப்புத் தகுதிகள் ?' தங்களிடம் இல்லாமலிருந்தால் மேற்கொண்டு இந்த தளத்தையும், அரசு தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கும் எண்ணத்தையும் தொடருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். அவ்வாறு ஏதேனும் ஒன்றோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட தீவினைகளோ உங்கள் உள்ளத்தில் இருந்தால், இன்று முதல் (26.01.2012), இந்த நன்னாளில் அத்தனை சுய நல எண்ணங்களையும் களைந்து, நம் தேசத்திற்காக, நம் தேசத்தின் கடைக் கோடி மக்களுக்காக உழைக்க 'நான் தேர்வு எழுத காத்திருக்கிறேன்' என்ற உறுதி மொழி எடுப்போம்.
இந்திய ஜனநாயகத்திற்கு 63 வது பிறந்த நாள் வாழ்த்துக்களை எங்கள் கீழை இளையவன் வழிகாட்டி தளம் சார்பாக தெரிவித்துக் கொள்கிறோம்.
No comments:
Post a Comment