Thursday, 24 May 2012

ஐ.ஏ.எஸ். ஆக வேண்டுமா? இதைப் படியுங்கள்!

ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் என்கின்ற பதவிகளைக் கேட்டாலே அந்தப் பதவி வகிப்பவர்களை வியந்து நோக்கி வருகிற இளைஞரா நீங்கள்? அந்தப் படிப்பை படித்துத் தேறி "அது போன்ற பதவிகளை நாமும் அடைய முடியுமா' என நினைத்ததுண்டா? நிச்சயம் உங்களால் முடியும்! இதோ - சிவில் சர்வீஸ் தேர்வுகளை சுலபமாகக் கையாளும் வழிகள் இங்கே... தங்களுக்குள்ள வானளாவிய அதிகாரத்தின் மூலம் நேர்மையாகவும், பொதுமக்களுக்கு சேவை புரிவதையே கடமையாகவும் கொண்டு செயல்பட்டு, மக்கள் மனதில் நீங்கா இடம் பிடிக்கும் அதிகாரிகளைப் பற்றி நாம் கேள்விப்படுகிறோம் அல்லவா? இத்தகைய உயர் அதிகாரிகளை ஒவ்வொரு ஆண்டும் மத்திய தேர்வாணையம் தேர்வு செய்து வருகிறது.


இத்தேர்வைச் சந்திக்க நாடு முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் சுமார் நான்கு லட்சம் மாணவர்கள் தயார் ஆகிறார்கள். இதற்கு அடிப்படைத் தகுதிகளாக இரண்டு தகுதிகளைக் கூறலாம். முதலாவதாக கல்வியறிவுத் தகுதி. ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். பட்டப்படிப்பு இறுதி ஆண்டு மாணவர்களும் தகுதியானவர்கள்தான். இத்தேர்வை எழுத விரும்புவோர் பட்டப்படிப்பை வெற்றிகரமாக முடித்திருந்தால் போதும். மதிப்பெண்கள் பற்றி கவலைப்படத் தேவையில்லை. திறந்த நிலை பல்கலைக்கழகத்தில் பெற்ற பட்டப்படிப்பும் தகுதியானதுதான்.


அடுத்ததாக வயது வரம்புத் தகுதி. இதில் தேர்வு எழுதும் ஆண்டில் ஆகஸ்ட் முதல் தேதி அன்று 21 வயது பூர்த்தி ஆனவராக இருத்தல் வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு பொதுப் பிரிவைச் சேர்ந்தவராக இருந்தால் 30 வயதும், பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவராக இருந்தால் 33 வயது வரையிலும், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்தவராக இருந்தால் 35 வயது வரையிலும் எழுதலாம். மேலும் ஒவ்வொரு பிரிவினருக்கும் அதிகபட்சம் எத்தனை முறை எழுத வேண்டும் என்ற கட்டுப்பாடும் உள்ளது.

பொதுப்பிரிவினருக்கு 4 முறையும், பிற்படுத்தப்பட்டோருக்கு 7 முறையும் அவகாசம் அளிக்கப்படும். ஆனால் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு எந்த ஒரு வரைமுறையும் இல்லை. எப்போது தேர்வு?ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் அல்லது ஜனவரி மாதத்தில் தேர்வுக்கான விளம்பரம் மத்தியத் தேர்வாணையத்தால் வெளியிடப்படும். ஆனால் இந்த ஆண்டு பிப்ரவரியில்தான்   வெளியிடப்பட்டது. விளம்பரம் வெளியான தேதியில் இருந்து விண்ணப்பிக்க ஒரு மாத காலம் அவகாசம் கொடுக்கப்படும். 
தற்போது இந்த தேர்வுகளுக்கு ஆன் லைனிலே விண்ணப்பிக்கலாம். பொதுவாக முதல் நிலைத்தேர்வு மே அல்லது ஜூன் மாதம் ஏதேனும் ஒரு ஞாயிற்றுக்கிழமையில் நடைபெறும்.

தேர்வின் நிலைகள் சிவில் சர்வீசஸ் தேர்வு முதல்நிலைத் தேர்வு (பிரிலிம்ஸ்), முதன்மைத் தேர்வு (மெயின்), ஆளுமைத் திறன் எனும் நேர்முகத் தேர்வு (இன்டர்வியூ) என்று மூன்று கட்டங்களாக நடைபெறுகின்றது. முதல் நிலைத்தேர்வு: 2010-வரை முதல்நிலைத் தேர்வில் பொது அறிவுப்பாடம், விருப்பப்பாடம் என இரு தாள்கள் இருந்தன. ஆனால் 2011-ல் இருந்து மத்தியத் தேர்வாணையம் புதிய முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் விருப்பப்பாடத்தை நீக்கிவிட்டு அதற்குப் பதிலாக திறனறித் தாளை சேர்த்துள்ளது. இரு தாள்களுமே கொள்குறி (அப்ஜெக்டிவ்) வினாக்களை உள்ளடக்கியுள்ளன. பொது அறிவுத்தாளுக்கு 200 மதிப்பெண்களும் திறனறி தேர்வுக்கு 200 மதிப்பெண்களும் வழங்கப்படும்.

இந்தத் தேர்வில் நெகடிவ் மதிப்பெண் முறை பின்பற்றப்பட்டு வருகிறது. எப்பகுதிகளில் இருந்து கேள்விகள் வரும்? பொது அறிவுத்தாள் கேள்விகள் பெரும்பாலும் இளங்கலைப் பட்டப்படிப்புக்கு சமமானதாகவே இருக்கும். இந்தத் தாள் ஏழு பகுதிகளை உள்ளடக்கியதாக இருக்கும். வரலாறு, புவியியல், அறிவியல், பொருளாதாரம், இந்திய அரசியல் அமைப்புச் சட்டம், சுற்றுப்புறவியல், நடப்பு நிகழ்வுகள் என ஏழு பகுதிகளைக் கொண்டது. ஒவ்வொரு பகுதியிலிருந்தும் வெவ்வேறு விகிதங்களில் கேள்விகள் கேட்கப்படும். கடந்த சில ஆண்டுகளாக முதல்நிலைத் தேர்வில் நடப்பு நிகழ்வுகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. உயிரியல், பொருளாதாரம், புவியியல், அரசியல் அமைப்புச் சட்டம், சுற்றுப்புறச்சூழல் ஆகிய பகுதிகளில் இருந்து கேட்கப்படும் கேள்விகள் கூடப் பெரும்பாலும் நடப்பு நிகழ்வுகளை ஒட்டியே அமைகின்றன. உதாரணமாக மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு வெளிச் சோதனை முறைக் கருவூட்டலுக்காக ராபர்ட் எட்வர்ட்சுக்கு வழங்கப்பட்டது.

இதனால் உயிரியலில் வெளிச்சோதனை முறைக் கருவூட்டல் பற்றிக் கேள்வி கேட்கப்படலாம். அதே போல் ஏதேனும் புதிய அறிவியல் கண்டுபிடிப்புகள் நிகழ்ந்திருந்தாலும் அதில் இருந்தும் கேள்விகள் கேட்கப்படலாம். பொது அறிவுத்தாளை எப்படி அணுகுவது?இனி எவ்வாறு இந்த பொது அறிவுத் தாளை அணுக வேண்டும் என்பதைப் பார்ப்போம். முதலில் எந்த ஒரு போட்டித் தேர்வுக்குத் தயார் செய்தாலும் அந்தத் தேர்வின் முந்தைய ஆண்டுகளில் நடைபெற்ற தேர்வின் கேள்வித்தாளைப் பெற வேண்டும். அது தான் சிறந்த வழிகாட்டியாக இருக்கும். சிவில் சர்வீசஸ் தேர்வுக்கான முதல்நிலைத் தேர்வின் முந்தைய ஆண்டுகளின் கேள்விகள் புத்தக வடிவிலேயே கிடைக்கின்றன. இந்தக் கேள்வி வங்கிகளை முதலில் வாங்கி இரண்டு அல்லது மூன்று முறை நிதானமாகப் பார்க்க வேண்டும். அப்போது தான் கேள்விகள் ஒவ்வொரு பகுதியில் இருந்து எவ்வாறு கேட்கப்படுகின்றன என்பதைத் தெளிவாக உணர முடியும்.

இது தவிர, சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு என்று பிரத்யேகமாக வெளிவரும் மாத இதழ்களில் ஏதேனும் ஒன்றை முழுமையாகப் படித்தல் அவசியம்.ஏதேனும் ஒரு ஆங்கில நாளிதழை தினந்தோறும் தவறாமல் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். தமிழில் முதன்மைத் தேர்வை எழுதுபவர்கள் தினமணியைப் படிப்பது சிறந்ததாகும். குறிப்பாக தலையங்கத்தையும், தலையங்கப் பக்கக் கட்டுரைகளையும் தவறாமல் படிக்க வேண்டும். தேர்வில் வென்றவர்கள்தான் இதைக் கூறுகிறார்கள்! நாளிதழ்களில் வரும் தலையங்கங்கள் ஒரு சமூகப் பிரச்னையை ஆழ்ந்து அறிய உதவும். உதாரணமாக தெலங்கானா தனி மாநிலக் கோரிக்கையைப் பற்றிய தலையங்கம் வந்தால் அதில் ஏன் தனி தெலங்கானா இயக்கம் தோன்றியது என்பதிலிருந்து தனித்
தெலுங்கானா கொடுத்தால் என்ன விளைவு ஏற்படும் என்பது வரையில் விளக்கமாக ஆராய்ந்து கொடுக்கப்பட்டிருக்கும். எனவே தலையங்கத்தைத் தவறாமல் படிப்பது சமூகத்தின் முக்கிய நிகழ்வுகளை விரிவாக, பாரபட்சமின்றி அறிந்து கொள்ள உதவும்.

மேலும், மாணவர்களின் சிந்தனைத் திறனை வெகுவாக வளர்க்கும். நாளிதழ்களைப் படிக்கும் போது, அனைத்துப் பகுதிகளையும் படிக்க வேண்டிய அவசியம் இல்லை. குற்றம் சார்ந்த செய்திகள், ஊழல்கள், சாலை விபத்துகள், அரசியல் கட்சிகளைச் சார்ந்த செய்திகளைத் தவிர்த்துவிடலாம். இவை தவிர, மற்ற அரசாங்கம் சார்ந்த பொது நிகழ்வுகள், உலக நிகழ்வுகள், இவை பற்றிய செய்திகளை கவனமாகப் படிக்க வேண்டும். உதாரணமாக, திட்டக்குழு பற்றியோ அல்லது பணவீக்கம் பற்றியோ செய்தி வந்தால் அதனைக் கூர்ந்து படிக்க வேண்டும். தேர்வுக்குத் தயார் ஆகும் ஆண்டுக்கு முந்தைய 12 மாத நாளிதழ்களை கண்டிப்பாகப் படிக்க வேண்டும். அதிலும் நாளிதழ்களைப் படித்த உடன் குறிப்பெடுத்துக் கொள்ளுதல் அவசியம். படித்த விஷயங்களை நினைவு கொள்வதற்கும், திரும்ப தேவைப்படும்போது எடுத்துப் பார்ப்பதற்கும் இது உதவும்.

அடுத்ததாக, படிப்பதற்கு எடுத்துக் கொள்ள வேண்டியது - என்.சி.இ.ஆர்.டி. (நேஷனல் கவுன்சில் ஃபார் எஜுகேஷனல் ரிஸர்ச் அண்டு டிரெய்னிங்) எனப்படும் மத்திய அரசு பாடப் புத்தகங்கள். இதில் 8-ம் வகுப்பு பாட நூல் முதல் வாங்கிப் படிக்க வேண்டும். உதாரணமாக வரலாற்றுப் பாடத்துக்கு 8ஆம் வகுப்பு பாடத்தில் இருந்து 12-ம் வகுப்பு வரை உள்ள என்.சி.இ.ஆர்.டி. புத்தகங்களைப் பெற்று படிக்க வேண்டும். இதனுடன் பொது அறிவுத்தாளுக்கான மற்ற பகுதிகளைப் படிப்பதற்கு வெவ்வேறு புத்தகங்கள் கிடைக்கின்றன என்பது உங்களுக்குத் தெரியும். இதுபோன்ற புத்தகங்களைப் பெற்றுப் படிக்க வேண்டும். இவ்வாறு படிக்கும்போது முந்தைய ஆண்டு வரலாற்றில் கேட்கப்பட்ட கேள்விகளை ஆராய்ந்தோமானால் எந்தெந்தப் பகுதிகள் முக்கியமானவை என்றும் எவை எல்லாம் முக்கியமானவை அல்ல என்றும் உணர்ந்து கொள்ளலாம். இவ்வாறு பொது அறிவுத்தாளில் உள்ள ஒவ்வொரு பகுதிக்கும் என்.சி.இ.ஆர்.டி. புத்தகங்களைப் படிக்க ஆரம்பித்து முந்தைய ஆண்டு கேள்வி வங்கியில் முடிக்க வேண்டும். இந்தப் புத்தகங்களுடன் ஏதேனும் ஒரு இயர் புக் வாங்கி அதில் உள்ள பொது அறிவுப் பகுதியை நன்றாகப் படித்துக் கொள்ள வேண்டும்.

திறனறி தேர்வு இரண்டாம் தாளான திறனறி தேர்வுத் தாள் ஏழு பகுதிகளை உள்ளடக்கியது. அதாவது பொருள்அறியும் திறமை (Comprehension) தர்க்கத் திறன் (logical reasonin), முடிவெடுக்கும் திறமை (Decision making) அடிப்படை எண் அறிவு (Basic Numeracy) அடிப்படை ஆங்கில அறிவு (Basic English Language) போன்ற பகுதிகளில் இருந்து கேள்விகள் கேட்கப்படும். இவற்றை விரிவாகக் காண்போம்.பொருள் உணரும் திறமையில் ஒரு செய்தி கொடுக்கப்பட்டு அதில் இருந்து சில வினாக்கள் கேட்கப்படும். உதாரணமாக ஒன்றைப் பார்க்கலாம். முடிவெடுக்கும் திறனில் ஒரு சூழ்நிலையைக் கொடுத்து அதில் எவ்வாறு சாதுரியமாக தேர்வர்கள் முடிவு எடுக்கிறார்கள் என சோதிக்கப்படுகிறது என வைத்துக் கொள்வோம்.

கீழ்க்காணும் வகையில் கேள்வியைக் கேட்கலாம்:

நோய்வாய்ப்பட்ட  மூதாட்டி ஒருவர் அவருடைய ஓய்வூதியத்தைப் பெறுவதற்குத் தேவையான சான்றிதழ்களை சமர்ப்பிக்க முடியவில்லை. அதனால் அவருடைய மருத்துவச் செலவுகளை எதிர்கொள்ள முடியவில்லை. மேலதிகாரியின் விதிமுறைகளை அறிந்த நீங்கள் இந்தப் பிரச்னைகளை எவ்வாறு அணுகுவீர்கள்?

1) விதிமுறையின்படியே நடப்பேன்.
2) மாற்றுச் சான்றிதழ்களைச் சமர்ப்பிக்க ஏற்பாடு செய்வேன்.
3) எனது சொந்த பணத்தைக் கொடுத்து அந்த மூதாட்டிக்கு உதவி செய்வேன். அதே வேளையில் நடைமுறை விதிகளைத் தளர்த்த மாட்டேன்.
4) மூதாட்டியின் தேவையை உணர்ந்து விதிமுறையில் சில தளர்வுகளை பின்பற்றுவேன்.

இது போன்ற கேள்விகள் தேர்வர்களின் முடிவெடுக்கும் திறனைச் சோதிப்பதுடன் அவர்கள் உணர்ச்சிவசப்படக்கூடியவரா? அல்லது எவ்வாறு சாதுரியமாக முடிவெடுக்கக் கூடியவர்? எனத் தெரிந்து கொள்ள கேட்கப்படுகின்றது. இந்தக் கேள்விகள் ஆங்கிலத்திலும் இந்தியிலும் மட்டுமே கேட்கப்படும். இரண்டாம் தாளை அணுகுவதற்குப் புரிந்து கொள்ளும் திறனும், கூர்ந்து நோக்கும் திறனும், வேகமாக சிறந்த முடிவெடுக்கும் திறனும் அவசியம். இவை மூன்றும் கிராமப்புற மாணவர்களிடம் இயல்பாகவே அமைந்துள்ளது அனைவரும் அறிந்ததே. இரண்டாம் தாளைப் பொருத்தவரையில் ஆங்கிலத்தில் 12-ம் வகுப்பு அளவிலான புலமை இருந்தாலே எளிதில் கையாளலாம். மேலும் அடிப்படை எண் அறிவுக்கும் பத்தாம் வகுப்பு அளவிலான அறிவு இருந்தாலே போதும் என மத்தியத் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

முதல் நிலைத் தேர்வுக்கு தயார் ஆகும் மாணவர்களுக்குக் குறைந்தபட்சம் எட்டு மாதகால அவகாசம் தேவைப்படும். எனவே பட்டப்படிப்பு படிக்கும் இறுதியாண்டு மாணவர்கள், கல்லூரி இறுதியாண்டில் இருந்தே இந்த தேர்வுக்கான பயிற்சியைத் தொடங்கலாம். அப்போதுதான் போதிய கால அவகாசத்துடன் எந்த ஒரு மன அழுத்தமும் இல்லாமல் முழு மூச்சாகத் தயாராக முடியும்.முதல் நிலைத் தேர்வு முடிவு முதல் நிலைத் தேர்வை ஜூன் மாதம் எழுதினால் ஆகஸ்ட் முதல் வாரத்தில் தேர்வு முடிவுகள் வெளியாகும். இதில் எத்தனை பணியிடங்கள் காலியாக உள்ளதோ அதைவிட சுமார் 13 மடங்கு மாணவர்கள், அடுத்த கட்டமான முதன்மைத் தேர்வுக்கு தேர்ந்தெடுக்கப்படுவர். உதாரணமாக, 1000 பணியிடங்கள் காலியாக இருந்தால் 13,000 பேர் முதன்மைத் தேர்வு எழுதுவதற்குத் தேர்ந்தெடுக்கப்படுவர்.

முதன்மைத் தேர்வு (மெயின்) 'மெயின்ஸ்' என அறியப்படும் முதன்மைத் தேர்வு ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் இறுதியில் வரும். முதன்மைத் தேர்வில் மூன்று பாடங்கள் உள்ளன. பொது அறிவு ஒரு பாடமாகவும், இரண்டு வெவ்வேறு விருப்பப்பாடங்கள் மற்ற இரண்டு பாடமாகவும் உள்ளன. ஒவ்வொரு பாடமும் இரண்டு தாள்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அதாவது தாள்களாகவும், இரு விருப்பப் பாடங்கள் இரண்டு தாள்கள் வீதம், என ஆக மொத்தம் ஆறு தாள்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு தாளுக்கும் தலா 300 மதிப்பெண்கள் கொடுக்கப்படுகின்றன. இவ்வாறாக ஆறு தாள்களுக்குத் தலா 300 மதிப்பெண்கள் வீதம் மொத்தம் 1800 மதிப்பெண்கள். அதோடு ஒரு கட்டுரைத் தாளும் இடம்பெறுகிறது. அதற்கு 200 மதிப்பெண்கள். ஆக மொத்தம் முதன்மைத் தேர்வில் 2000 மதிப்பெண்கள் கொண்ட வினாவுக்கு விடையளிக்க வேண்டும்.

மேலும் முதன்மைத் தேர்வில் கட்டாயமாக்கப்பட்ட இரண்டு மொழித்தாள்கள் உள்ளன. அவை ஒரு ஆங்கிலத் தாளும் மற்றும் ஏதேனும் ஒரு பட்டியலிடப்பட்ட இந்திய மொழித் தாளும் அடங்கும். இவை இரண்டும் மிக முக்கியமான பாடங்கள் ஆகும். ஏனென்றால் தேர்வர்கள் இந்த ஒன்பது தாள்களைக் கொண்ட முதன்மைத் தேர்வை எழுதியவுடன் முதலில் இந்த மொழித் தாள்களைத்தான் மதிப்பிடுவார்கள். இந்த இரண்டு மொழித் தாள்களிலும் தேர்ச்சி பெற்றால்தான் தேர்வர்களின் மற்ற பாடத்துக்கான விடைத்தாளை மதிப்பிடுவார்கள். ஆனால் இந்த மொழித் தாள்களின் மதிப்பெண்கள் மொத்த மதிப்பெண்களுடன் சேர்த்துக் கொள்ளப்படாது. இந்த இரண்டு மொழித்தாள்களும் 12-ம் வகுப்பு அளவிலான கேள்விகளாகவே இருக்கும். அதனால் தேர்வர்கள் பயப்படத் தேவை இல்லை. எந்தெந்த விருப்பப் பாடம் உகந்தது? இந்தத் தேர்வு முறையைத் தெரிந்து கொண்டால் அடுத்ததாக மாணவர்களின் மனதில் எழும் கேள்வி எந்த விருப்பப்பாடத்தை எடுத்தால் எளிதில் வெற்றி பெறலாம்? என்பதுதான்.

விருப்பப்பாடத்தைப் பொருத்தவரையில் இரண்டு வகையாகப் பிரிக்கலாம். ஒன்று தொழில் நுட்பப் பாடங்கள் (Technical Subjects) மற்றது பொதுவான பாடங்கள். மாணவர்கள் பொதுவாகவே தொழிநுட்பப் பாடங்களை தவிர்த்து விடுவர். எந்த ஒரு போட்டித் தேர்வுக்குத் தயாராகும்போதும்   சிறந்த வழிகாட்டுதலும், தேவையான புத்தகங்களும் தடையில்லாமல் கிடைத்தல் அவசியம்.இவை இரண்டுமே தொழிநுட்பப் பாடங்களுக்கு எளிதாக கிடைப்பது இல்லை. அதனால் பொதுவாக உள்ள பாடங்களையே மாணவர்கள் தேர்ந்தெடுக்கின்றனர். உதாரணமாக, புவியியல், வரலாறு, பொது நிர்வாகம், சமூகவியல், உளவியல் போன்ற பாடங்களைத் தேர்ந்தெடுக்கலாம். ஏனென்றால் இந்தப் பாடங்களுக்குத் தேவையான வழிகாட்டுதலும், தேவையான புத்தகங்களும் எளிதாகக் கிடைக்கும். தாய்மொழியில் தேர்வை எழுதலாமா?முதன்மைத் தேர்வை மாணவர்கள் ஆங்கிலத்திலோ அல்லது அவர்களது தாய்மொழியிலோ எழுதலாம். ஆங்கிலத்தில் முதன்மைத் தேர்வை (மெயின்) எழுதினால், நேர்முகத் தேர்வான ஆளுமைத் திறன் தேர்வை ஆங்கிலத்தில் சந்திக்க வேண்டும். ஆனால் தாய்மொழியில் முதன்மைத் தேர்வை எழுதினால் ஆளுமைத் திறன் தேர்வை ஆங்கிலத்திலோ அல்லது தாய்மொழியிலோ எதிர்கொள்ளலாம்.

முதன்மைத் தேர்வு ஒவ்வொரு மாநிலத்தின் தலைநகரத்தில்தான் நடைபெறும். முதன்மைத் தேர்வில் 2,000 மதிப்பெண்களுக்கு சுமார் 50 சதவீதம், அதாவது 1,000 மதிப்பெண்கள் பெற்றாலே ஆளுமைத் திறன் தேர்வுக்கு அழைக்கப்படுவர்.முதன்மைத் தேர்வுகள் முடிவுகள்அக்டோபர் மாதத்தில் எழுதிய முதன்மைத் தேர்வுக்கான முடிவுகள் மார்ச் மாதம் முதல் வாரத்தில் வெளியிடப்படும். இதில் வெற்றி பெற்றவர்கள் ஆளுமைத் திறன் தேர்வுக்கு அழைக்கப்படுவர். ஆளுமைத்திறன் தேர்வு ஏப்ரல் மாதத்தில் தொடங்கும். ஆளுமைத்திறன் தேர்வு நேர்காணல் என முன்பு அறியப்பட்டது இப்போது ஆளுமைத் திறன் என அழைக்கப்படுகிறது. ஆளுமைத்திறன் தேர்வு தலைநகர் தில்லியில்தான் நடைபெறும். ஆளுமைத் திறனுக்கு செல்லும் மாணவர்களுக்கு தில்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்திலேயே சலுகை அடிப்படையில் தங்கும் வசதி, உணவு ஏற்பாடு செய்து தரப்படுகிறது. இச்சலுகையைப் பெற மாணவர்கள் சென்னையில் உள்ள சிவில் சர்வீசஸ் அரசு பயிற்சி மையத்தில் பதிவு செய்தல் வேண்டும். அல்லது தமிழ்நாடு அரசு பொதுத் துறையில் இணைச் செயலரிடம் இருந்து கடிதம் பெற்றுச் செல்லுதல் அவசியம்.

ஆளுமைத் திறனுக்கு அதிகபட்சமாக 300 மதிப்பெண்கள் அளிக்கப்படும்.இதில் பெரும்பாலும் மாணவர்களின்  பயோ டேட்டா, பொழுதுபோக்கு, நடப்பு நிகழ்வுகள் போன்றவற்றை சார்ந்தே கேள்விகள் கேட்கப்படும். நேர்முகத் தேர்வு நடக்கும் நாளன்று காலை வெளிவந்த செய்தித்தாள்களைத் தவறாமல் படித்துச் செல்ல வேண்டும்.இந்தத் தேர்வின்போது பல்வேறு துறைகளில் பணியாற்றிய ஐவர் குழுவினர், தேர்வர்களின் ஆளுமைத் திறனைப் பரிசோதிப்பர். இந்தத் தேர்வின்போது கேட்கப்படும் கேள்விகளுக்கு சாதுரியமான பதில்களையும், அதே சமயத்தில் நேர்மையான பதில்களையும் கூற வேண்டும். தேர்வர்களின் குணநலன்கள், முடிவு எடுக்கும் திறன் மற்றும் தலைமைப் பண்பு ஆகியவற்றை அறியும் வகையில் கேள்விகள் அமையும். மேலும் சூழ்நிலை சார்ந்த கேள்விகளும் கேட்கப்படலாம்.

உதாரணமாக, நாட்டின் பாதுகாப்புக்குக் கடும் அச்சுறுத்தலாக உள்ள நக்ஸலைட்டுகளை கைது செய்தாலும் உரிய ஆதாரம் இல்லை என்ற பேரில் அவர்கள் விடுவிக்கப்பட்டு விடுகின்றனர். இதனால் அவர்களைக் கைது செய்வதற்குப் பதிலாக என்கவுன்ட்டரில் கொலை செய்து கொன்றுவிடலாமா? என்று கேட்கலாம்.இதற்கு "கூடாது' என்பதே தேர்வர்களின் பதிலாக இருக்க வேண்டும். ஏனென்றால் ஒரு தரப்பினர் வன்முறையில் ஈடுபடுகிறார்கள் என்பதற்காக அவர்களை நாம் கொன்றுவிட முயலக் கூடாது. அவ்வாறு செய்வது மனித உரிமை மீறலாகும். நக்ஸலைட்டுகள் என்கவுன்ட்டரில் கொலை செய்யப்படுகிறார்கள் என்ற குற்றச்சாட்டு எழுந்த போதெல்லாம் இதை உச்சநீதிமன்றமும், தேசிய மனித உரிமை ஆணையமும் கண்டித்துள்ளது என்று பதில் அளிக்க வேண்டும். இவ்வாறு பதில் அளித்ததும், நக்ஸலைட்டுகள் மட்டும் பொதுமக்களை கண்மூடித்தனமாக சுட்டுக்கொல்கிறார்கள். இது நியாயமா? இது மனித உரிமை மீறல் இல்லையா? என்று தேர்வர்களை மடக்கி, மீண்டும் அவர்களின் முடிவெடுக்கும் திறனை சோதிக்க முயலலாம். இருப்பினும் தேர்வர்கள் தங்களது முடிவில் உறுதியாக இருக்க வேண்டும்.

என்கவுன்ட்டர் செய்வதை எவ்விதத்திலும் நியாயப்படுத்திவிடக்கூடாது. நம்முடைய பதில்களை அனுசரித்தே இந்த நேர்முகம் எவ்வளவு நேரம் நடக்கும் என்பது முடிவாகும். ஆளுமைத் திறன் தேர்வில் அதிகபட்சம் 240 மதிப்பெண்கள் வரை அளிக்கப்படுகிறது. 160 மதிப்பெண்கள் எடுத்தாலே சராசரி மதிப்பெண்ணாகக் கருத்தில் கொள்ளலாம்.இறுதித் தேர்வு முடிவுஆளுமைத் திறன் தேர்வுகள் ஏப்ரலில் தொடங்கிமே முதல் வாரம் வரை நடைபெறும். அனைவருக்கும் ஆளுமைத் திறனறியும் நேர்முகம் முடிந்தவுடன் ஓரிரு வாரங்களில் தேர்வு இறுதி முடிவுகள் வெளியிடப்படும். இறுதி முடிவில் எழுத்துபூர்வ தேர்வுகள், நேர்முகம் உள்ளிட்ட மொத்தம் 2300 மதிப்பெண்களுக்கு மாணவர்கள் எடுத்த மதிப்பெண்களின் அடிப்படையில் அகில இந்திய ரேங்க் பட்டியல் தயாரித்து வெளியிடப்படும்.  ரேங்குக்கு தகுந்தவாறு ஒரு பணியிடத்தினைப் பெறலாம்.

ரேங்க் பட்டியலில் முதலில்  வருவோர்க்கு ஐ.ஏ.எஸ், ஐ.எஃப்.எஸ். போன்ற   பணியிடங்களும், அதற்குப் பின்பு வருவோர்களுக்கு ஐ.பி.எஸ், ஐ.ஆர்.எஸ், ஐ.ஆர்.டி.எஸ் போன்ற பணியிடங்களும் கிடைக்க வாய்ப்பு உள்ளது. இந்தத் தேர்வை பொருத்தவரை எந்த கட்டத்தில் தோல்வியைத் தழுவினாலும் மீண்டும் முதல்நிலைத் தேர்வில் இருந்துதான் தொடங்க வேண்டும்.இதில், ஐ.ஏ.எஸ், ஐ.எஃப்.எஸ் பணியிடத்தைத் தவிர மற்ற பணியிடங்களை ஏற்கெனவே பெற்றவர்கள் தங்கள் பணியில் தொடர்ந்து கொண்டே மீண்டும் தேர்வு எழுதி ஐஏஎஸ், ஐஎஃப்எஸ் ஆக முயற்சிக்க முடியும். ஆனால் ஐஏஎஸ், ஐஎஃப்எஸ் பணியிடத்தைப் பெற்றவர்கள் அதே பணியில் இருந்து கொண்டு மீண்டும் தேர்வு எழுத முடியாது. இந்தத் தேர்வில் நீங்கள் வெற்றி பெற்றவுடன் உங்களுக்கு இரண்டு ஆண்டு காலம் பயிற்சி அளிக்கப்படுகிறது. பின்னர், நீங்கள் விருப்பம் தெரிவித்துள்ளதன் அடிப்படையில் இந்தியாவின் ஏதாவது ஒரு மாநிலத்தில் இந்திய ஆட்சிப் பணியில் அமர்த்தப்படுவீர்கள்.

அப்புறம் என்ன? இறைவன் நாடினால் நீங்களும் ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி தான்!


நன்றி : தின மணி

No comments:

Post a Comment